புரட்சி தளபதி விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் சக்ரா என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும், 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார். இதேபோல தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்கவும், உத்தரவாத தொகையாக ஒரு கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ட்ரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால் குறுகிய காலத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குகள் குறித்து செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக உள்ளது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால்.