உத்தரப் பிரதேசஹத்ராஸ் இளம் பெண் பலாத்கார கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியலின இளம் பெண் ஒருவர், கடந்த மாதம் தொடக்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

முக்கியமாக, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம் பெண், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக, அந்த இளம் பெண்ணின் குடும்பத்தாரையும் ஊர் மக்களையும் சந்திக்கப் பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி வருபவர்கள் மீது தடியடி போன்ற அடக்கு முறைகளை அம்மாநில போலீஸார் கையாண்டு வந்ததும் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சம்பவம் நடந்த கிராமத்துக்குள் நுழைவதற்கான இரண்டு வழிகளிலும் தடுப்புச் சுவர்களை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தடை இருந்தபோதிலும், சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்தினரை சந்திக்க ஹத்ராஸ் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி, டெரக் ஓ பிரையன் ஆகியோரை போலீசார் கீழே தள்ளிவிட்டனர். அதன் பிறகு அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இது, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டும், அவரின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக் கேட்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது, அனைவரின் கவனத்தையும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவர் மட்டும் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். 

அந்த நேரம், ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அந்த மாவட்ட போலீசாரிடம் அவர்கள் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் சந்தீப் தாகூர் என்பவரும் ஒருவர். இதனால், குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்றும், நாடு முழுவதும் இருந்தும் பலரும் குரல் கொடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, “சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரில் ஒருவரை நன்றாக எங்களுக்குத் தெரியும்” என்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறினார். அத்துடன், 00சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 4 கைதிகளில் ஒரு கைதியான சந்தீப் தாகூர், போலீசாருக்கு கடிதம் எழுதினார். 

அந்த கடிதத்தில், “நானும், அந்த இளம் பெண்ணும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நேரில் சந்திப்பதுடன், போனிலும் அடிக்கடி பேசிக்கொள்வோம். எங்களது நட்பு அவர்களது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று, வயலில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த அந்த பெண்ணை சந்திக்கச் சென்றேன். அங்கே அவரது தாயாரும், சகோதரர்களும் இருந்தனர். என்னை வீட்டுக்குப் போகும்படி அந்த பெண் கேட்டுக் கொண்டதால், நானும் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு தான், எங்களது நட்பு பிடிக்காமல் ஆத்திரமடைந்த பெண்ணின் தாயாரும், சகோதரர்களும் அவரை அடித்து, கடுமையாகக் காயப்படுத்தி உள்ளனர் என்று அவரது கிராம மக்களே கூறிய பிறகு தான் எனக்கு தெரிய வந்தது” என்று கூறியுள்ளார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹத்ராஸ் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும், சிபிஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, நரம்பியல் தொடர்பான (Brain mapping) சோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று, அலிகார் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில், “ஹத்ராஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரை யோகி தலைமையிலான மாநில அரசு, தாங்க முடியாத அளவு ஒடுக்கிவருவதாக” ராகுல் காந்தி, பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், “ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாடும் நீதி கேட்டு துணை நிற்கிறது. குண்டர்களின் ஆட்சியில் சீருடை அணிந்த ரவுடிகளின் போக்குக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு” என்றும், ராகுல் காந்தி, தனது டிவிட்டரில் கருத்து 
தெரிவித்து உள்ளார்.