சகோதர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இடையிலான திருமணம், சட்ட விரோதமானது என்று,  நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சகோதர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி, அங்குள்ள லூதியானா மாவட்டத்தில் கன்னா சிட்டி - 2, காவல் நிலையத்தில் சட்டப் பிரிவு ஐபிசியின் 363 ன் படி, ஆள் கடத்தல், 366 ஏ ன் படி, சிறுமி கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், அந்த மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது, இதனால், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 21 வயது இளைஞர், தனக்கு முன் ஜாமீன் கோரி அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் ஒரு சிறுமி” என்று குறிப்பிட்டார். 

அத்துடன், “21 வயது மனுதாரர் மற்றும் சிறுமி ஆகியோரின் தந்தைகள் இருவரும், சகோதரர்கள் என்றும், அவர்கள் மனுதாரர் மீது புகார் அளித்துள்ளனர் என்றும், கூறினார். 

“இந்தப் புகாருக்கு காவல் துறை சார்பாக, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதிலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சிறுமி கடந்த 2003 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், இதனால் கணக்கிட்டுப் பார்க்கும் போது 17 வயது மட்டுமே அந்த சிறுமிக்கு ஆகிறது” என்றும், குறிப்பிட்டார்.

ஆனால், “சம்மந்தப்பட்ட மனுதாரர், அவர்கள் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 'சபிந்தா' வை ( இரண்டு நபர்களுக்கு பொதுவான மூதாதையர் இருந்தால் திருமணத்தைத் தடுக்கிறது ) மீறி செயல்பட்டு விட்டார்” என்றும், குற்றம் சாட்டினார்.

“ இந்த சட்டப்படி, ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற உண்மையை மனுதாரர் மறைத்துள்ளார்” என்றும், கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ இரு சகோதர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இடையேயான திருமணம், சட்ட விரோதமானது” என்று, கருத்து தெரிவித்தது. அப்படி, “சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் சட்டத்தின் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், நீதிமன்றம் தெரிவித்தது.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.