சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேசுக்கு சலுகை வழங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு, சிறைத்துறை டி.ஜி.பி. பதில் அளித்து உள்ளார்.

கேரளாவில் செயல்பட்டு வரும் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தில், கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி பார்சல் ஒன்று வந்து உள்ளது. அதில், தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வரவே, அதிகாரிகள் விரைந்து சென்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அந்த பார்சல் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன், அந்த பார்சலை அதிகாரிகள் கைப்பற்றினர். 

அதனைத் திறந்து பார்த்த போது, அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அந்த பார்சல் மேல் ஒட்டப்பட்டு இருந்த லேபிளில் உணவுப் பொருள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதனால், சந்தேகம் எழ பார்சலை வாங்க வந்த சரீத் மாட்டிக் கொண்டார். அவர் மூலமாக கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது யார் என, அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினார்கள். 

இந்த விசாரணையின் போக்கில் தான், ஸ்வப்னா சுரேஷ் என்ற பெயர் வெளியானது. அப்போது, தொடங்கிய இந்த கடத்தல் விசாரணை, தற்போது வரை அடங்காமல் நடைபெற்று வருகிறது. 

அத்துடன், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக் கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இது தொடர்பான வழக்கை, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது தீவிரவாத நிதி திட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ், அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார்கள். 

கேரள மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை சுற்றி, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

அதே நேரத்தில், இந்த வழக்கில் ஜாமின் கோரி ஸ்வப்னா தாக்கல் செய்த மனு கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் விஜயகுமார் வலியுறுத்தினார். ஆனால், “தங்கம் கடத்தலில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது” என்று, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அதே போல், ஜாமின் வழங்கக் கோரி ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், “இந்த வழக்கு எந்த ஒரு அடிப்படையுமின்றி கற்பனையில் உருவாக்கப்பட்ட வழக்கு என்றும், மத்திய - மாநில அரசுகள் இடையேயான பிரச்சனையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்றும், அவர் பதிவு செய்திருந்தார்.

மேலும், தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். 

இந்த நிலையில், அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், சிறைத்துறை டி.ஜி.பி. ருஷிராஜூக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேசை பார்க்க முதல் நாள் 15 பேர் வந்ததாகவும், பின்னர் பல்வேறு தரப்பை சேர்ந்த நபர்கள் வந்து அவரை சந்தித்து விட்டு சென்றனர்” என்றும், குறிப்பிட்டு இருந்தார். 

“இதன் மூலம், இந்த வழக்கைத் திசை திருப்ப கேரள முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் முயன்று வருகிறார்கள் என்றும், அவருக்கு சிறையில் பல சலுகைகளும் செய்யப்பட்டு உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி. ருஷிராஜு விளக்கம் அளித்து உள்ளார். அதன் படி, “சிறையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து போதிய ஆதாரம் இல்லாமல், அடிப்படை ஆதாரம் இல்லாத தகவலை பாஜக மாநில தலைவர் தெரிவித்து உள்ளார். எனவே, இது போன்று ஆதாரம் இல்லாத, தகவல்களை வெளியிட்டு சிறைத்துறை மீது களங்கம் ஏற்படுத்த முயன்றதற்கு வருத்தம் தெரிவித்து, அவர் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “ஸ்வப்னா சுரேசை சந்திக்க விசாரணை அதிகாரிகள் தவிர, அவருடைய தாயார், மகன், மகள், சகோதரி, கணவர் ஆகியோர் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்றும், சிறையில் அவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் தான் ஸ்வப்னா சுரேசை பார்த்துப் பேசி உள்ளனர்” என்றும், கூறினார்.

“அந்த சந்திப்பும், சிறையில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது என்றும், இதனால் ஸ்வப்னா சுரேசுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை” என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. ருஷிராஜு விளக்கம் அளித்து உள்ளார்.