இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக மட்டுமில்லாமல்  வில்லி,  குணச்சித்திர கதாபாத்திரங்களில் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஷாலின் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் வில்லியாகவும் தளபதி விஜய் நடித்த சர்கார், நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் எச்சரிக்கை வெல்வெட் நகரம் என கதாநாயகியை மையப்படுத்திய கதை களங்களிலும் நடித்துவருகிறார். அடுத்ததாக யாமிருக்க பயமே திரைப்படத்தின் இயக்குனர் டிகே இயக்கத்தில் காட்டேரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வரலட்சுமி வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். கொரோனா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அனைவரும் அலட்சியமாக இருப்பதை  மையப்படுத்தி முகக்கவசம் பற்றிய நகைச்சுவை விழிப்புணர்வு வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளார். 

நடிகர் யோகிபாபு, கிருஷ்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யூலேகா, ரெஜினா, சந்தீப் கிஷன் என முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் ,மக்கள் பொதுவாக எவ்வாறு தவறாக முகக்கவசத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி எவ்வாறு முகக்கவசத்தை சரியாக அணியவேண்டும் என்பதையும் செய்து காட்டும் இந்த நகைச்சுவை விழிப்புணர்வு வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.