கொரோனாவின் தாக்கம், இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்னொரு பக்கம், கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கையும் விகிதமும் அதிகரிப்பதையும் காணமுடிகிறது. இறப்பு விகிதம் குறைகின்றது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அதுவும் அதிகமாகவே இருக்கின்றது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின், மூத்த தலைவருமான ஹர்ஷ் வர்தன், ஞாயிற்றுக்கிழமைகளில், சமூகவலை தளம் மூலமாக, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்படி அவர் நேற்று இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு குறித்து பேசியதாவது :

``கொரோனா வைரசுக்கு எதிராக, உள்நாட்டில் மூன்று விதமான தடுப்பூசிகளுக்கான பரிசோதனை, பல்வேறு கட்டங்களில் உள்ளன. இவற்றை பயன்படுத்த அவசர அனுமதி அளிக்கும் திட்டம் ஏதும் இல்லை. அந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் புள்ளி விபரங்கள் அடிப்படையின் தான், உரிய முறையில், முறையான அனுமதி அளிக்கப்படும்.

இது மக்களின் உடல்நலன் பாதுகாப்பு தொடர்பானது என்பதால், அவசரப்பட மாட்டோம். தடுப்பூசி கிடைத்தாலும், துவக்கத்தில் மிகக் குறைந்த அளவே கிடைக்கும். அதனால், முதல் கட்டத்தில் எந்தெந்த பிரிவினருக்கு தடுப்பூசி அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

வைரஸால் அதிக பாதிப்பு ஏற்படுவோர், அதிக அளவில் உயிர்பலி ஏற்படும் வயது பிரிவினர் குறித்த தகவல்களை சேகரித்துள்ளோம். அதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்.கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை செய்வதற்கு, புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ள, 'பெலுடா' பரிசோதனை கருவி, பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்து, வெற்றிகரமாக அமைந்து உள்ளது.

வரவிருக்கும் திருவிழாக் காலங்களில், மக்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே கொண்டாடும்படியும், கூட்டத்தை தவிர்த்து, மத்திய அரசின் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

கோவிட்-19 க்கு எதிராக போராடுவதுதான் முக்கியமான நடவடிக்கை என மக்களுக்கு நினைவூட்டிய மத்திய அமைச்சர், தொற்று பரவலைக் குறைப்பதும், உயிரிழப்பைத் தடுப்பதும் தான் தனது முக்கியமான பணி. கோவிட் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அடுத்த 2 மாதங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த மக்கள் இயக்க பிரசாரத்தில் மக்கள் இணைய வேண்டும்.

கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 2000 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருக்கின்றது. அறிவியல் மற்றும் தொழிற் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கிய இந்த பெலுடா பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பெங்களூரில் உள்ள அணுசக்தி துறையின் உயிரியல் தேசிய மையம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவிட் தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனை முடிந்து 2ம் கட்ட பரிசோதனை நடந்து வருகின்றது, 3ம் கட்ட பரிசோதனை தொடரவுள்ளது. மேலும் 2 மற்றும் 3 முறை போடப்படும் தடுப்பூசிகள் குறித்து தற்போது பரிசோதனை நடந்து வருகின்றது.

கோவிட் -19 ஒழிப்புப் பணிக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 கோடி வழங்கியதாகவும், 3 மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்கள் இந்த நிதியை முழுவதுமாக பயன்படுத்திவிட்டன. கோவிட் - 19 சிகிச்சையில் ஆயுர்வேத மருத்துவ முறைகளின் தாக்கம் குறித்து அறிவியல் ஆய்வுகள் தொடங்கியுள்ளது"

என்று தெரிவித்தார்.