எந்தவொரு வியாபாரமாக இருந்தாலும், அதை எந்தக் காலத்தில் செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் வெற்றியும் தோல்வியும் அமையும். இதில் வியாபாரத்தில் காலத்தின் அவசியம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு எவ்வளவு இன்னவேட்டிவாக அதை விற்பனை தளத்துக்கு கொண்டு வருகிறோம் என்பதும் முக்கியம். ஏனெனில் சரியான நேரத்தில் செய்யப்படும் இன்னவேட்டிவான தயாரிப்புகளுக்கு, எப்போதுமே கிராக்கி அதிகம்! அப்படி சரியான நேரத்தில் செய்யப்பட்ட இன்னவேட்டிவ்வான ஒரு முன்னெடுப்புதான், ஹோம் மேட் மற்றும் ஃபேஸ் மாஸ்க் தயாரிப்புகள்! இது குறித்து விரிவாக இந்தக் கட்டுரையில் தெரிந்துக் கொள்வோமே...!

 

கொரோனாவினால், முடங்கிப் போன எத்தனையோ விற்பனைகளை நாம் அறிவோம். இருப்பினும் இப்போதும் சுடச்சுட இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான ஒரு விற்பனை, வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மாஸ்க் வகைகள். 

 

அதில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஷங்கர் குரே என்பவர், தங்கத்தில் முகக்கவசம் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். தங்கம் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், கிட்டத்தட்ட 2.89 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த தங்க மாஸ்க்கை செய்திருக்கிறார். இப்படி மாஸ்க்கை வாழ்வாதார தொழிலாக மாற்றியிருக்கும் இந்த நபர், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மாஸ்க்கை பொறுத்தவரை, மூச்சுத்திணறலை ஏற்படுத்தாத வகையில் இது இருக்க வேண்டும் என்பது விதி. அந்தவகையில் இந்த தங்க மாஸ்க், தனக்கு இதுவரை மூச்சுத்திணறலை ஏற்படுத்தவில்லை எனக்கூறியிள்ளார் ஷங்கர். சுவாசிப்பதற்கு ஏதுவாக சிறு சிறு துளைகளுடன் இதில் இருக்கிறது. இதுதொடர்பாக பேசியுள்ள ஷங்கர் குரே, ``இந்த தங்க மாஸ்க் கொரோனாவிலிருந்து என்னை பாதுகாக்குமா என்பது தெரியாது. ஆனால், எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. மிகவும் மெலிதாக இருக்கும் இந்த மாஸ்க், எனக்கு சௌகரியமாக இருக்கிறதும்கூட" எனக்கூறிய்யுள்ளார். 

 

இதைத்தொடர்ந்து, ``மாஸ்க் ஆடம்பரமல்ல, அத்தியாவசியம்... இதில் யாரும் இப்படியான ரிஸ்க்கை எடுக்க வேண்டாம்" என மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

 

தங்க மாஸ்க்கை விமர்சிக்கும் அதேவேளையில், அணியும் உடைகளுக்கு பொருத்தமாக மாஸ்க் தேர்ந்தெடுப்பதும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

பெருநிறுவண விற்பனை என்பதோடு நிற்காமல், தமிழகத்தின் கடைக்கோடிகளில் இருக்கும் சிறு சிறு சுய உதவிக் குழுக்களும்கூட இந்த விற்பனை சந்தைகளில் இறங்கி தீவிரமாக இயங்கிவருகின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் யாதெனில், கொரோனா பரவத் தொடங்கியபோது, துணி மாஸ்க்கை மருத்துவர்களுமேகூட பரிந்துரைக்கவில்லை. ஆனால், நாள்களும் மாதங்களும் உருண்டோடியபோது, `என்ன செய்தாலும் கொரோனாவை நம்மால் தவிர்க்க முடியாது' என்ற புரிதலை அறிவியலாளர்கள் பெற்றுவிட்டனர். தவிர்க்க முடியாது என்றாலும், நம்மால் பரவுதலை இயன்ற வரை தடுக்க முடியும் என தெரியவந்தபோது, அதை நோக்கி அவர்கள் அனைவரும் இயங்கத் தொடங்கினர். அப்போதுதான், `லிவ் வித் கொரோனா' முன்னெடுப்பு உள்நுழைந்தது. அதன் ஒருபகுதியாகத்தான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட துணி மாஸ்க் வகைகளை அனைவரும் பயன்படுத்தலாம் என்ற அறிவுரை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 

துணி மாஸ்க் உபயோகிக்கலாம் என்றவுடன், உடைகளுக்கு ஏற்றார் போன்ற மேட்சிங் கலர் மற்றும் டிசைனிங் மாஸ்க் வகைகள்தான் முதலில் சந்தைக்கு வந்தன. அடுத்த சில நாள்களில், பிரத்யேக ஹேண்ட் டிசைன் மாஸ்க் வகைகள் வந்தன. அடுத்தபடியாக, பிரிண்டர் உதவியோடு ஹீரோக்களின் மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகள் பதிக்கப்பட்ட துணி மூலம் வடிவமைக்கப்பட்ட மாஸ்க் வகைகள் வந்தன. இப்போதோ, நம்மை நாமே ஃபோட்டோ எடுத்து அதை துணியொன்றில் பிரிண்ட் செய்து மாஸ்க் தயாரித்துக்கொள்ளலாம் என்ற நிலையும் வந்துவிட்டது. இந்த `சுய முகம் கொண்ட மாஸ்க்' ஐடியா, வேறு ஏதோவொரு உலக நாட்டில் உருவான யோசனையில்லை. நம்ம தமிழ் மக்களின் கிரியேட்டிவிட்டிதான் இது! ``மாஸ்க் போடும்போது, நம்ம முகம் மறைஞ்சு, ஆள் அடையாளமே தெரியாம போய்டுது. இந்த மாஸ்க் மூலமா, அந்தப் பிரச்னை ஏற்படுறதில்லை" என்கிறார்கள் இதனால் பயன்பெற்றவர்கள்! இதோடு நிற்கவில்லை நம் ஆட்களின் கிரியேட்டிவிட்டி. திருமணம் போன்ற மங்கள் காரியங்களில் பங்குபெறும்போது அணிவதற்கென்று, காஸ்ட்லி பட்டு மாஸ்க் சிலவும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. 

 

மாஸ்க்கில் இத்தனை க்ரியேட்டிவிட்டு காட்டுவது, பலதரப்பினராலும் ஈர்க்கப்பட்டாலும்கூட இந்த மாஸ்க் யாவும் வைரஸ் பரவுதலை தடுக்குமா என்பதும், இத்தனை நிறமிகளோடு தயாரிக்கப்படும் மாஸ்க் வகைகள் வேறு ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்துமா என்பதும் கேள்விக்குட்பட்ட விஷயமாகவே இருக்கிறது. இதேபோல துணிகளில் மாஸ்க் தைக்கும்போது, எந்தத்துணியை பயன்படுத்துகிறோம் என்பதில் அதிக கவனம் தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக சின்தெடிக் போன்ற துணிகளில் மாஸ்க் செய்தால், காற்றுக்கூட உள்நுழைய சிரமப்படும் என்பதால், அதுவேகூட மூச்சுத்திணறல் பிரச்னைக்கு வழிவகுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

தொற்றுநோயியல் மருத்துவர் சித்ராவிடம், ஹோம் மேட் துணி மாஸ்க் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் கேட்டோம்.

 

``துணிகளில் மாஸ்க் தயாரிப்பவர்கள், எத்தனை அடுக்குகள் கொண்டு மாஸ்க்கை தயாரிக்கிறோம் - எந்தத் துணியில் அதை தயாரிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மூன்றடுக்கில் மாஸ்க் செய்தால், மிகச்சிறந்த பலனை எதிர்ப்பார்க்கலாம். இரண்டடுக்கு என்றால், பரவாயில்லை, ஓரளவு பலன் கிடைக்கும். ஒரேயொரு அடுக்குதான் என்றால், வீண். துணி தேர்ந்தெடுப்பை பொறுத்தவரையில் டிசைனர் மாஸ்க், பட்டுத்துணிகளில் மாஸ்க், முகங்கள் அச்சிடப்பட்டு செய்யப்படும் மாஸ்க் போன்றவற்றில் நிறமிகள் கலந்திருக்கும் வாய்ப்பு அதிகமென்பதால் துணித்தேர்வில் கவனம் தேவை. எந்த மாஸ்க்காக இருந்தாலும், உட்புறம் பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அத்தியாவசியம். மற்றபடி வெளிப்புறத்தை நினைத்துக் கவலை கொள்ள வேண்டாம். ஓரடுக்கு மாஸ்க், அதுவும் நிறமிகளால் செய்யப்பட்டது என்றால், தயவுசெய்து அவற்றை தவிர்க்கவும்.

 

மாஸ்க் தயாரிப்பை விட முக்கியம், அதன் உபயோகம். மூக்குக்கு கீழே மாஸ்க்கை கட்டிக் கொள்வது, அடிக்கடி கழற்றி கழற்றி கட்டுவது, இடைவெளிவிட்டு கட்டுவதெல்லாம் தவறான பழக்கம். மாஸ்க் அணியும்போது, ஒருகட்டத்துக்கு மேல் அவை ஈரமாகும் சூழல் உண்டு. குறிப்பாக, பேசிக்கொண்டே இருந்தால் மாஸ்க் விரைவில் ஈரமாகிவிடும். ஈரமாகிவிட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும். துணி மாஸ்க் என்றால், அவற்றை பாதுகாப்பாக கழற்றிவைத்துவிட்டு, வேறொரு மாஸ்க் பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு, இரண்டு மாஸ்க் என பயன்படுத்துவது சிறப்பு. மாஸ்க்கை கழற்றும்போதும், அப்புறப்படுத்தும்போதும் கவனம் தேவை. கைகளால் அவற்றின் பின்பகுதியை மட்டுமே தொட வேண்டும். மாஸ்க்கை அப்புறப்படுத்தியவுடன், கை கழுவுவது கட்டாயம்.

 

இனி வரும் நாள்கள், நாம் அனைவருமே மாஸ்கோடுதான் பயணப்பட வேண்டியிருக்கும். ஆகவே எல்லோரும் இப்போதே மாஸ்க் வாங்கியோ தயாரித்தோ வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய கட்டுப்பாடுகளில் கவனமாக இருந்தால் போதுமானது. வீட்டில், ஒவ்வொருவரும் தங்களுக்கென்ற மாஸ்க்கை தனியாக வைத்துக்கொள்ளவும். ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்த வேண்டாம். அன்றாடம் பயன்படுத்தும் மாஸ்க்கை, அன்றன்றே துவைத்து வெப்பத்தில் உலர வைப்பது அவசியம். அறைகளுக்குள் காயவைக்கப்படும் மாஸ்க் வகைகள், மூன்று நாள்களாவது உலர வைக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

 

மொத்தத்தில் இனிவரும் காலத்தில் மாஸ்க் ஆடம்பரமாகும் சூழலும் வரலாம். அந்தளவுக்கு அதற்கான விற்பனை சந்தை விரிவடையக்கூடும் என்பதால், நுகர்வோரை நாம் அதன் தேர்வில் கவனமாக இருப்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. 

 

சிந்தித்து செயல்படுவோமாக!

 

- ஜெ.நிவேதா