கடந்த பல மாதங்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பின் காரணமாக, உலகம் முழுவதும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்ற அறிக்கையும் வெளியிடப்பட்டது. மேலும், கொரோனா தாக்கம் கொஞ்சம் குறைந்ததால், கல்லூரி இறுதியாண்டு மாணவ/மாணவிகளுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.  

தற்போது கொரோனா நெருக்கடி நிலை காரணமாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ., அகாடமிக் இயக்குனர், ஜோசப் இம்மானுவேல் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார ரீதியான அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளால் பள்ளிகள்  தற்போது மூடப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. எனவே நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவும் நிர்வாக குழு மற்றும் பாடத் திட்ட குழுவும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

மாணவர்களுக்குத் தேவையான முக்கிய பாடங்கள் முதன்மையான அம்சங்கள் பாதிக்காத வகையில் இந்த மாற்றங்கள் இருக்கும். பள்ளி தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாடத் திட்டக் குறைப்பு தொடர்பாக மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். குறைக்கப்படும் பாடத் திட்டம் பள்ளிகளின் அக மதிப்பீடு ஆண்டின் இறுதி பொதுத் தேர்வு ஆகியவற்றில் இடம் பெறாது. அதேபோல வகுப்புகள் நடத்தப்படும் நாட்களுக்கான அகாடமிக் காலண்டர் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிதாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய அகாடமிக் காலண்டரை பின்பற்ற வேண்டும். குறைக்கப்பட்ட பாடத் திட்ட விபரங்கள் சி.பி.எஸ்.இ.யின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும், பாடத் திட்டத்தினை குறைப்பது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தற்போது நடந்து வரும் கல்வி ஆண்டில், பாடத் திட்டக் குறைப்பு தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன; 1,500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல், கருத்து கல்வியாளர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்தனர்.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின்  சூழலைக் கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 30 சதவீதத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், மாணவர்களுக்குத் தேவையான முக்கிய அம்சங்கள், அடிப்படை பாடங்கள் குறைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த கல்வியாண்டில் கூட  நடத்த முடியாத பொதுத் தேர்வுகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் சூழ்நிலையால் CBSE பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.