உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்!

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்! - Daily news

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா! தியாகேசா!! என நெஞ்சுருகி தேரை இழுத்தனர்.

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். சைவ மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமான தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். கடல் போன்ற மக்கள் வெள்ளத்திற்கு இடையில் ஆடி அசைந்து வருவதால் ஆழித்தேர் என சமயக் குறவர்களால் அழைக்கப்படுகிறது. ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். 
 
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. அலங்கரிக்கப்படாத இந்த தேரின் பீடத்தின் உயரம் 36 அடி, அகலம் 36 அடி ஆகும். அதன்மேல் தேர் அலங்கர்க்கப்படும். தேரின் விமான பகுதி வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி என மொத்தம் 96 அடி உயரத்துடன் ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். 

மேலும் திருவாரூர் ஆழித்தேர் இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. 24½ அடி நீளம், 1½ அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்கள், 9 அடி விட்டமும், 1½ அடி அகலமும் உடைய 4 இரும்பு சக்கரங்கள் என தேரின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. இந்த சக்கரங்களை பெல் நிறுவனம் தயாரித்துள்ளது. 4 இரும்பு சக்கரங்களையும் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் தேரில் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேரின் மேல் ஆயக்கலைகள் 64-யும் விளக்கும் சிற்பங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இராமாயன மற்றும் மகாபாரத கதை சம்பங்கள் என மரச் சிற்பங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. மரத்தேரின் எடை 220 டன். இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் ½ டன், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் மொத்த எடை 300 டன்னாகும். தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் மற்றும் 4 டன் எடை கொண்ட கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அதனைத்தொடர்ந்து தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மேலும் இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் புவனப்பரியா உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா! தியாகேசா!! என விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இந்நிகழ்வில் திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டனர். 

மேலும் ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.  முன்னதாக அதிகாலையில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் அரசின் இதர துறையினரும் இணைந்து செய்துள்ளனர். பிரசிதிப்பெற்ற இத்தேரோட்டத்தால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


 

Leave a Comment