காதலிக்க மறுத்த பிளஸ் 1 மாணவி.. 14 முறை கத்தியால் குத்திய இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

காதலிக்க மறுத்த பிளஸ் 1 மாணவி.. 14 முறை கத்தியால் குத்திய இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! - Daily news

காதலிக்க மறுத்த பிளஸ் 1 மாணவியை, ஒரு தலைபட்சமாக காதலித்த இளைஞன், அந்த மாணவியை 14 முறை கத்தியால் குத்திவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆதிக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். 

இந்த சூழலில் தான், அந்த மாணவி நேற்றைய தினம் பிளஸ் 1 இறுதி தேர்வு எழுதிவிட்டு, தனது உறவினர் வீட்டிற்கு அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த மாணவி திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மாம்பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன், அந்த மாணவியை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

ஆனால், அந்த இளைஞன் எவ்வளவோ கெஞ்சியும், அந்த மாணவி அவனது காதலை ஏற்க மறுத்து விட்டதால், ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் அந்த மாணவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

அப்போது, இருவருக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து, அந்த மாணவியை சரமாரியாக குத்தி உள்ளார்.

இதனால், அந்த மாணவிக்கு கழுத்து உள்பட பல இடங்களில் கத்தி குத்து ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, அந்த மாணவியை கிட்டதட்ட 14 முறை கொடூரமாக குத்தி இருக்கிறார். 

இதில், படுகாயமடைந்த அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உள்ளார். 

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த மாணவியை நோக்கி ஓடி வந்துள்ளனர். இதனால், அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளான்.

பின்னர், கத்திக்குத்தால் தாக்குதலுக்கு ஆளான அந்த மாணவியை மீட்ட அந்த பகுதியில் சென்ற பொது மக்கள், மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதித்தனர். 

அங்கு, அந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அத்துடன், இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில், அந்த மாணவியை கத்தியால் குத்தியது அங்குள்ள பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த 22 வயதான கேசவன் என்பது தெரிய வந்தது. 

மேலும், இந்த கேசவன் கடந்த ஆண்டு இதே சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகியதும் தெரிய வந்தது.

தற்போது, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நேற்றைய தினம் மீண்டும் அதே மாணவியிடம் சென்று “தன்னை காதலிக்கும் படி வாக்குவாதம் செய்து, வற்புறுத்தியதும்” தெரிய வந்திருக்கிறது.

ஆனால், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்கவே, கோபம் அடைந்த கேசவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அந்த மாணவியை குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறான்.

பின்னர், தப்பியோடிய கேசவனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கீழே பூசரிப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது பள்ளி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கேசவன் என்பது தெரிய வந்தது. 

காதலை ஏற்க மறுத்ததால், பள்ளி மாணவியை கத்தியால் குத்திவிட்டு கேசவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment