டிரோன் கேமராவால் சிக்கிய ரவுடி.. குளத்தில் பதுங்கியிருந்த பரிதாபம்!

டிரோன் கேமராவால் சிக்கிய ரவுடி.. குளத்தில் பதுங்கியிருந்த பரிதாபம்! - Daily news

தென்காசியில் போலீசாரின் தேடலுக்கு பயந்து குளத்தில் பதுங்கிய ரவுடியை, டிரோன் கேமரா மூலம் போலீசார் மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ளது பச்ச நாயக்கன் பொத்தை என்ற பகுதி. அதனை ஓட்டியுள்ளது பச்ச நாயக்கன் குளம். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் அடர்ந்த நிலையில் செடிகள் வளர்ந்து காணப்படும். இந்நிலையில் தென்காசி நகரை சேர்ந்த சாஹுல் ஹமீது என்ற ரவுடியை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில் பிரபல ரவுடியான சாகுல் ஹமீது மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி காவல் நிலைய போலீசார், சாகுல் ஹமீதை தேடி வந்தனர். இதனால் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, நாயக்கர் பொத்து பகுதியில் உள்ள குளத்திற்குள் சாகுல்ஹமீது பதுங்கி வாழ்ந்து வந்தார். இதனால் போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் சில நாட்களுக்கு முன்பு குளத்திற்கு ஆடு மேய்க்க சென்ற அந்த பகுதியை சேர்ந்தவர்களை, சாகுல் ஹமீது அரிவாளை காட்டி மிரட்டி, அங்கு வரக்கூடாது என விரட்டியடித்து உள்ளார். இதுகுறித்து, ஆடு மேய்ப்பவர்கள் தென்காசி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், நேற்று காலை போலீசார் குளத்தை சுற்றிவளைத்தனர். குளத்தில் அதிகளவில் மரங்களும் செடிகளும் இருந்ததால் சாகுல்ஹமீது பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

அதனைத்தொடர்ந்து, டிரோன் கேமரா மூலம் குளத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, குளத்தில் உள்ள மரத்தின் அடியில் சாகுல்ஹமீது பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, குளத்திற்குள் இறங்கி சென்ற போலீசார், அவரை மடக்கிப்பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது, தன்னை எதற்காக கைது செய்தீர்கள்? என சாகுல்ஹமீது போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை தென்காசி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment