ஆம்வே நிறுவனத்தின் ரூ.758 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை!

ஆம்வே நிறுவனத்தின் ரூ.758 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை! - Daily news

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்ததாக திண்டுக்கல்லில் உள்ள ஆம்வே இந்தியா நிறுவனத்தின் சுமார் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆம்வே நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பி இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனத்தின் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராக இணைந்தால்,  விரைவில் பணக்காரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை தூண்டி இலட்சக்கணக்கானோரை தங்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து இந்த சங்கிலி அமைப்பில் உறுப்பினர்களை சேர்ப்பதன் மூலம் பொருட்களை விற்பனை செய்தல் என்ற போர்வையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கூட்டங்களை நடத்துகிறது. புதிய உறுப்பினர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தயாரிப்புகளை வாங்காமல்,  உறுப்பினர்களாக ஆவதன் மூலம் பணக்காரர்களாக ஆக வேண்டுமென அதிக விலைகொடுத்து வாங்குவதால் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஆம்வே நிறுவனம், தங்கள் நிறுவன பொருட்களை நேரடி விற்பனை செய்யாமல், மல்டி-லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என்ற போர்வையில் இமாலய மோசடியை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வழங்கும் பெரும்பாலான தயாரிப்புகளின் விலை மிகையானவை எனவும், உண்மைகளை அறியாத பொதுமக்கள், நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர தூண்டப்பட்டு, அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குவதாகவும், மக்களை ஆம்வே நிறுவனம் ஏமாற்றியுள்ளது அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  

மேலும் ஆம்வே நிறுவனத்தின் தயாரிப்புகளில் கவனம் செலுத்தாமல், உறுப்பினர்களாக இருப்பதன் மூலம் உறுப்பினர்கள் எவ்வாறு பணக்காரர்களாக மாறலாம் என்பதைப் பிரச்சாரம் செய்வதே நிறுவனத்தின் முழுக் கவனமும் இருப்பதாகவும், ஒரு நேரடி விற்பனை நிறுவனமாக மறைக்க தயாரிப்புகளை  பயன்படுத்தப்படுகின்றன எனவும் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் ஆம்வே நிறுவனத்தின் இந்த மோசடி தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, இயந்திரங்கள் வாகனங்கள் நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றை முடக்கியுள்ளது. 412 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மேலும் 346 கோடி மதிப்புள்ள வங்கியில் உள்ள தொகை என நிறுவனத்திற்கு சொந்தமான 36 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment