கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

இருப்பினும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்படு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, இரண்டு தடுப்பூசிகள் மனித சோதனைகளுக்குள் இறங்கியுள்லது.

அவை அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி மற்றும் ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும்.

இந்தியாவின் பணிகள் ஒருபக்கம் இருந்தாலும், இப்போதைக்கு உலகளவில் முதலிடத்தில் இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு நிறூவனமாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம். இவர்களின் தடுப்பூசிதான் முதலில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று உலக சுகாதார நிறுவனமேவும் எதிர்ப்பார்க்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பு மருந்தை இணைந்து உருவாக்கி, இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனைகளை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேருக்கு 17 இடங்களில் இந்த தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

பரிசோதனைகள் முடிவில், பாசிட்டிவாக ரெஸ்பான்ஸ் வந்தால், அதன் பின்னர் அக்டோபர் மாதம் கோவிஷீல்டு தயாரிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தயாரிப்பு பணியையும், சீரம் நிறுவனமே ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC) கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு, தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனை நல்லபடியாக முடிந்து, சீரம் நிறுவனம் தயாரிப்பு பணியை கையில் எடுத்தால், உலகமே விரைவில் கொரோனாவிலிருந்து விடுபடும் என்று நம்பிக்கையோடு நாம் எதிர்ப்பார்க்கலாம்.

முன்னதாக நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள மாடர்னா நிறுவனமும், முதலில் தடுப்பூசி கண்டறியும் போட்டியில் முன்னணியில் உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அமெரிக்க அரசு ரூ.7.5 கோடி நிதியை இந்நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது. இரண்டு கட்ட சோதனைகளில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை இந்நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ-1273 தடுப்பூசி உண்டாக்கியது. தற்போது இம்மருந்தை 30,000 பேருக்கு செலுத்தி இறுதி கட்ட சோதனை செய்கின்றனர். ஜூலை 27-ம் தேதி தொடங்கிய இச்சோதனை செப்டம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தடுப்பூசிக்காக பல்வேறு நாடுகள் ரூ.3 ஆயிரம் கோடியை இந்நிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளன.

அமெரிக்கா போலவே, இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதுபற்றி கேட்டு அறிவதற்காக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், அங்கு தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ஐஐபிஆர்’ என அழைக்கப்படுகிற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று சென்றார். அதன் இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை அவர் சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து பேராசிரியர் ஷபிரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறை செயல்முறைகள் உள்ளன. இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்குவோம்” என கூறியிருந்தார்.

இது தொடர்பாக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறும்போது, ``இஸ்ரேலில் ஐ.ஐ.பி.ஆர். உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை, இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் தொடங்கும்” என தெரிவித்திருந்தார்.

இப்படி பல நாடுகளும் தாங்கள்தான் முன்னிலையில் இருப்பதாக கூறினாலும், உலக சுகாதார நிறுவனத்தினர் ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் மருந்தையே முன்னிலைப்படுத்தி கூறிவருகின்றனர்.