கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது, ஜப்பானில் அனைத்தும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக அங்கு சூழல் சரியாக இல்லை. தற்போது அந்த நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி இருப்பது அந்த நாட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொடக்கத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தி கொரோனா தொற்றை கட்டுக்குள் ஜப்பான் வைத்து இருந்தது. பொது முடக்கமும் அமலில் இல்லை. இதை ஜப்பான் மாடல் என்று உலக நாடுகள் புகழ்ந்தன. நாட்டின் கலாச்சார, பண்பாட்டு நிலை கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது என்று அந்த நாட்டின் நிதியமைச்சரும் அறிவித்து இருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு இளைஞர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. ஆகவே குணமாவோர் விகிதம் அதிகம் இருப்பது. ஆனால் இப்போது அங்கு சூழலே வேறாக உள்ளது. தற்போது அங்கு அதிகளவில் முதியவர்களுக்கு தொற்று ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. உலகிலேயே முதியவர்கள் அதிகமாக இருக்கும் நாடு ஜப்பான்தான்.

மற்ற ஆசிய நாடுகளில் வேகமாக கொரோனா தொற்று பரவிக் கொண்டு இருக்கும்போது, பொருளாதாரம் குறித்து ஜப்பான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது. ஆனால், தற்போது மற்ற நாடுகள் நார்மலுக்கு வரும்போது, ஜப்பானில் அதிகரித்து வருகின்றது என்பது, பலருக்கும் அச்சத்தை தந்துள்ளது. முதலில் நாட்டில் வைரஸ் பரவல் ஏற்பட்டு இருக்கும்போது, கட்டுப்படுத்த எமர்ஜென்சியை அந்த அரசு அறிவித்து இருந்தது. ஆனாலும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று கட்டாயப்படுத்தவில்லை. வர்த்தகம் மூட வேண்டும் என்று அறிவிக்கவில்லை. இந்த் நிலையானது, மே மாதம் வரை அங்கு நீடித்தது. இதன் பின்னர் ஜூன் மாதம் உணவகங்கள், மதுபான கூடங்கள், குத்துச்சண்டை தளங்கள் போன்றவை வழக்கம்போல் இயங்கின.

இந்நிலையில்தான், இப்போது நோயாளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் பொது முடக்கத்தை தளர்த்தியது தவறு என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வியட்நாம், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகள் முதல் தொற்றுக்குப் பின்னர் இரண்டாம் தொற்றுக்கு தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகள் உடனடியாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தன. பரிசோதனை மேற்கொண்டது, தனிமைப்படுத்தியது என்று விரைவாக செயல்பட்டன. ஆனால், ஜப்பான் தாமதமாக அனைத்து முடிவுகளையும் எடுத்தது என்று வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மத்திய ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் ஹைடெயாக்கி ஒமுரா (Hideaki Ohmura) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய ஜப்பான் மாகாணத்தில் ஜூலை 15 முதல் நாள்தோறும் 100 க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. மத்திய ஜப்பான் ஆளுநர் ஹிடாகி ஓமுரா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த அவசரகால நிலையில் வணிக வளாகங்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்றுள்ளார்.

மேலும் மக்கள் கூட்டமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும், இந்த தொற்றால் பாதிக்கப்படும் 70 சதவீத மக்கள் 30 வயதுடையோர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு தொற்றின் அறிகுறி இல்லை என்பதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, இரவு நேரங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார் அவர்.

நேற்றைய தினம் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், `இளைஞர்கள் கொரோனா நோயாளிகளாக மாறும் நிலை அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதத்தில், இளைய நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகியுள்ளது' எனக்குறிப்பிட்டிருந்தனர். இதற்கான உதாரணமாக, ஆசியாவில் ஜப்பானை குறிப்பிட்டிருந்தார்கள் அவர்கள். `இளைஞர்களே... நீங்கள் கட்டாயம் பார்ட்டி செய்ய வேண்டுமா?' என்று கேள்வியும் எழுப்பியிருந்தனர். அப்படியான நிலையில், இன்றைய தினம் ஜப்பானில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது, மிகவும் கவனிக்கத்தக்க முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.