பிளாஸ்மா சிகிச்சை கரோனா பாதித்தவர்களுக்கு பெரிதளவில் பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்பது எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:

"இவை முதற்கட்ட ஆய்வுகள். பிளாஸ்மா சிகிச்சையின் பலன் குறித்து கண்டறிவதற்காக இரண்டு குழுக்களாக தலா 15 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவினருக்கு கொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் நெறிமுறைகளுக்குள்பட்ட பொதுவான சிகிச்சை. மற்றொரு குழுவினருக்கு பிளாஸ்மா சிகிச்சையுடன், பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. 

இதன் முடிவில், இரண்டு குழுக்களுக்கும் ஒரே அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு, நோயாளிகளுக்கு பெரிதளவில் மருத்துவப் பலன்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதேசயம், எந்தவொரு முடிவுக்கும் வர கூடுதல் ஆதாரங்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிளாஸ்மா சிகிச்சை பாதுகாப்பானது, நோயாளிகளுக்கு எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதையே தற்போதைய ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், இது பெரிதளவில் பலனளிக்கக் கூடியதாகவும் இல்லை. எனவே, இதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பிளாஸ்மா சிகிச்சையின் பலன்கள் குறித்து கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தி வருகிறது. எனினும், அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

பிளாஸ்மா சிகிச்சை என்பது, ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் உருவாகியிருக்கும் எதிரணுக்களை வைத்து தரப்படும் சிகிச்சை முறை. 

இப்படி குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.

இருந்தாலும், நோயிலிருந்து மீண்ட எல்லோராலும் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. "கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்" என்பதுதான் மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படும் கருத்து. நோயில் இருந்து மீண்டவர்கள் உடலில் எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க எலிசா சோதனை நடத்தப்படும்.

மேலும் பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 - 65 வயது வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் அவர்கள் உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்னும் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு பெறப்பட்டு நாளிலிருந்து 14-வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது

இதுதொடர்பாக கடந்த மாதம் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ''பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்புசக்தி அளவிடப்பட்டு தகுதியான நபர்களிடம் இருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை தானம் அளிக்கலாம். ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டுமுறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும்" என்று கூறப்பட்டிருந்தது.