சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி உலகை சிதைத்துவருகிறது. உலகின் எந்த நாடுகளும் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. இதுவரையில், உலக அளவில் 6,36,41,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக 14,74,984 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 1.39 கோடி பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,74,332 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்திலுள்ள இந்தியாவில் 94,63,254 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1,37,659 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகில் அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் உள்ளன. இருப்பினும், இப்போது கொரோனா வைரஸ் எதன் மூலம் பரவத் தொடங்கியது என்பது கண்டறியப்படாமல் இருந்துவருகிறது. சீனாவில் இறைச்சி மார்க்கெட்டிலிருந்து கொரோனா பரவியது என்று நம்பப்பட்டுவந்த நிலையில், அதனை சீனா மறுத்துவருகிறது. சீனாவில் கொரோனா பரவுவதற்கு முன்னரே வேறு நாடுகளில் கொரோனா பரவியுள்ளது என்று விளக்கமளித்துவருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இந்தநிலையில், கொரோனா பரவல் தொடர்பாக இன்று (டிசம்பர் 1) பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ``கொரோனா வைரஸ் எந்த விலங்கு மூலம் பரவத் தொடங்கியது என்பதைக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் செய்யும். வரும் தலைமுறைகளை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அந்த விவரத்தை தெரிந்துகொள்வது முக்கியம். இந்த மர்மத்தின் வேரிலிருந்து தெரிந்துகொள்ள உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது. சீனா இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு ரொம்பவும் தெளிவானது. அந்த வைரஸின் தொடக்கத்தைக் கண்டறிய வேண்டும். அது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க உதவும்" என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தோன்றியதை அறிவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ், “கொரோனா தோற்றம் குறித்து அறிந்துகொள்ள அனைத்தையும் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும்,“சிலர் இதை அரசியல்மயமாக்கி வருகின்றனர். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் உள்ளது. நாங்கள் வூஹானிலிருந்து ஆய்வைத் தொடங்குவோம். இந்த வைரஸின் தோற்றத்தை நாங்கள் அறிந்து கொள்வது எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவும்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “தயவுசெய்து இதை அரசியல்மயமாக்க வேண்டாம். அறிவியலை அடிப்படையாகக் கொண்டு எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். மேலும், விஞ்ஞான ரீதியாக எங்கள் ஆய்வுகளை திசைதிருப்ப அரசியல்மயமாக்கல் பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் ரஷ்யாவில் தயாராகி வரும் ‘ஸ்புட்னிக்’ என்ற தடுப்பூசி, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக 90 சதவீதம் வெற்றிகரமாக செயல்படக்கூடியது என்று, அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது. பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் முதற்கட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ தரவுகளையும், உற்பத்தி நடைமுறை தொடர்பான தகவல்களையும் காண வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசியை மதிப்பீடு செய்ய இந்த தகவல்கள் சமர்பிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார மைய உதவி இயக்குநர் ஜெனரல் மரியாங்கெலா சிமாவோ தெரிவித்துள்ளார்.