ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வி அடைந்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. மேலும் இரண்டு போட்டிகளிலுமே அளவுக்கு அதிகமான ரன்களை பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கியுள்ளனர். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் சுற்றுப்பயண அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விளையாடும் 11 பட்டியலில் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே வரும் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பந்துவீச்சாளர் நடராஜனை அடுத்த போட்டியில் அணியில் எடுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பயனர்களிடம் பிரபல தொலைக்காட்சி சேனல் ட்விட்டர் வாயிலாக கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்த நடிகர் சதீஷ் நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப் பட வேண்டும். திறமை மற்றும் காலத்தின் கட்டாயம் என்று பதிலளித்துள்ளார். சதீஷின் இந்த கருத்திற்கு அவரைப் பின் தொடரும் பல இணையவாசிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எதார்த்தமான டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் சதீஷ். சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் திரைப்பிரபலங்களில் இவரும் ஒருவர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் சதீஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்த படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ஜெயம் ரவியுடன் பூமி, ஆர்யா நடிக்கும் டெடி போன்ற படங்களில் நடித்துள்ளார் சதீஷ். சமீபத்தில் நடிகர் சதீஷுக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.