தமிழகத்தில் நேற்று (செப் 6), புதிதாக 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 773 பேர், விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது என சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டது. 

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த மாவட்டம் வந்தவர்களில் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 820 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 90% ஆக உயர்ந்துள்ளது. அதில், இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதித்து 11,264 பேர் (8%) சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மேலும், இன்று (செப் 7) காலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களில் 1,27,528 பேர் குணமடைந்துள்ளனர். 11,264 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,862 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகதில் 1254 பேரும், கோடம்பாக்கத்தில் 1221 பேரும் அடையாறில் 898 பேரும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 390 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதே வேளையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் தான் கொரோனா பாதித்தவர்களில் தலா 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு சீராக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 5 மாதங்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் விரைவு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மாவட்ட்ம் விட்டு மாவட்டம் செல்ல தயாராகியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றன. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது.

அதில், கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், அனைத்து விதமான தளர்வுகளையும், அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதை தடுக்க, அரசு தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், நாளை (செப் 8ம் தேதி) முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.