கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

இருப்பினும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்படு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, இரண்டு தடுப்பூசிகள் மனித சோதனைகளுக்குள் இறங்கியுள்ளது.

ரஷ்யா மட்டும், தாங்கள் தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதாக கூறிவிட்டது. இருப்பினும் அதில் பாதுகாப்பின்மை பிரச்னை இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, `எப்படி முழுமையாகச் சோதனை செய்யாமல் மனிதர்களுக்கு இதை அளிக்கலாம். இது பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்யாமல் எப்படி மக்களுக்குக் கொடுக்க முன்வரலாம். ஏன் அரசு இவ்வளவு அவசரப்படுகிறது. இது பெரிய ரிஸ்க்' என்று பலரும் ரஷ்ய அரசை கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அத்தனை விமர்சனத்துக்குப் பிறகும், ரஷ்யா உலக சுகாதார நிறுவனத்தினருடன் ஒத்துப்போக இப்போதும் மறுப்பு தெரிவித்தவாறே இருக்கிறது. 

இந்நிலையில், ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்காவில் வெகுவிரைவில் தடுப்பூசியொன்று விநியோகத்துக்கு வரும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் அஸ்ட்ரஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கிவிட்டதாகவும், பரிசோதனைகள் முடிந்து, தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.

ரஷ்ய தடுப்பூசியை போல இதில் பிரச்னை இருக்காது என்று சொல்லப்பட்டாலும், இதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

அது, ஏற்கெனவே உலக சுகாதார மையத்தில் இருந்து வெளியேறவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது என்பதால், இந்த தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தோடு சேர்ந்து இயங்காது என சொல்லப்படுகிறது.

உலக சுகாதார மையத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஏராளமான சீர்திருத்தங்கள் தேவை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜூட் டீர் பேசியபோது, ``கொரோனாவை வீழ்த்த சர்வதேச கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும். ஊழல் நிறைந்த உலக சுகாதார மையமும், சீனாவும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களுடன் அமெரிக்கா இணையாது. புதிய கோவிட்-19 தடுப்பூசி அமெரிக்க தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதையும், உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதையும் அதிபர் நிச்சயமாக உறுதிசெய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 61 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கிட்டதட்ட 63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரம் இந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் வேட்பாளராக நிற்கும் ட்ரம்ப் பின்னடைவை சந்திக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தினால் தான் ஓரளவுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தடுப்பூசியை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் செயல்படுகிறார் ட்ரம்ப்.
 
இந்நிலையில், அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தடுப்பூசியை மக்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் மருத்துவ ஊழியர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், தேசிய பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசியை முதலில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏ மற்றும் தடுப்பூசி பி என இரண்டு வகையான தடுப்பூசிகள் தயாராக இருப்பதாக அமெரிக்க அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மூன்று தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.