இந்தியாவில், நாடு முழுவதும் நேற்று வரை (04/09/2020) மொத்தம் 4,77,38,491 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நேற்று (04/09/2020) ஒரு நாளில் மட்டும் 10,59,346 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (04/09/2020) வரை மொத்தம் 51,30,741 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (04/09/2020) மட்டும் தமிழகத்தில் 83,699 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கொரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் புதிய உச்சம் அடைந்து வருகின்றன.  நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 20 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது, அதற்கு முன்புவரை பதிவாகி இருந்த பாதிப்பு எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.  இவற்றில், சென்னை, மும்பை, புனே மற்றும் புதுடெல்லி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்கள் ஆகும்.

இவை தவிர உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பிற மாநிலங்களின் கிராமப்புற பகுதிகளிலும் பாதிப்புகள் அதிகரித்து புதிய கொரோனா மண்டலங்கள் உருவாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

இருப்பினும் இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வரிசையில் 61 லட்சம் பேருடன் அமெரிக்கா முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதனை தொடர்ந்து 2வது இடம் பிடித்துள்ள பிரேசிலில் 40 லட்சம் பேர் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38,53,406ல் இருந்து 39,36,747 ஆக உயர்ந்துள்ளது.

140 கோடி அளவிலான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில், பரிசோதனை எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.  பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 லட்சம் என்ற அளவை கடந்துள்ளதுடன், பிரேசிலின் எண்ணிக்கைக்கு சற்று குறைவாக உள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு வரிசையில் இந்தியா 2வது இடத்தினை நோக்கி நெருங்கி சென்றுள்ளது.

இதுவொருபுறம் இருக்க, ``இனி டாக்டரின் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்" என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே படிபடியாக அறிவிக்கப்படும் ஊரடங்கு தளர்வினால் மக்கள், வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பொது போக்குவரத்து தொடங்கியிருப்பதால் பாதிப்புகள் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்பவர்கள் டாக்டர்களின் பரிந்துரையின் படி மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் டாக்டர் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா சோதனை செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அல்லது எங்கேனும் பயணம் மேற்கொள்பவர்கள், தேவைப்பட்டால் கொரோனா சோதனை செய்து சான்றிதழ் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.