கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அவருக்கு தீவிரமனது என்று செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, தான் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார் எஸ்.பி.பி.

ஆனால் நாளடைவில் வயது முதிர்வினால் அவருக்கு கொரோனா நிஜமாகவே தீவிரமடையத் தொடங்கிவிட்டது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்குப் பிறகு, அவர் மிக தீவிரமான நிலையில் இருப்பதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனையே தெரிவித்தது. ஆக.13ம் தேதி நள்ளிரவு நேரத்தில் அவரின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக மருத்துவமனை தரப்பு கூறியிருந்தது. அதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திரையுலகினர் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையுலகில் உச்ச நடிகர் ரஜினி முதல் இசையலமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என பலரும் எஸ்.பி.பி குணமடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரார்த்தனை செய்தனர். தினமும் மாலை இதுதொடர்பாக தன் தந்தையின் அன்றைய ஹெல்த் அப்டேட்டை வெளியிட தொடங்கினார் எஸ்.பி. சரண்.

எஸ்.பி.பி.க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர் பாடிய பாடல்களும் அவர் சிகிச்சைப் பெறும் அறையில் ஒலிக்கப்படுகிறது. அதற்கு அவர் கைகளை அசைத்து தாளம் இடுகிறார். மயக்க நிலையிலிருந்து மீண்டு வருகிறார். சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு சுய நினைவுடன் இருக்கிறார். எதையோ என்னிடம் சொல்வதற்காக எழுத முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இந்த வாரத்திற்குள் எழுத்து மூலம் என்னிடம் பேசுவார் என்று நம்புகிறேன் என ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.

ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பிபியின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், 95 சதவிகித சுயநினைவுடன் தற்போது அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் நலம்பெற பிரார்த்தனை மற்றும் கடினமாக முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகள் கொண்ட கடிதத்தை தனது கைப்பட சில தினங்களுக்கு முன் எழுதி இருக்கிறார் எஸ்.பி.பி. அந்த மூன்று வார்த்தைகள் - Love u all என்பது.

இப்படி பாசிடிவாக கூறப்பட்டு வந்த எஸ்.பி.பி. யின் உடல்நிலை, இன்றும் நலமாகவே இருந்திருக்கிறது. தற்போது, எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்றாகிவிட்டதாக அவர் மகன் சரண் கூறியிருக்கிறார். சரண் கூறுகையில், ``அப்பா, கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டார். கோவிட் நெகடிவ் என அவருக்கு ரிப்போர் வந்துவிட்டது! இருப்பினும், நுரையீரல் தொற்று குணமடைய சிறிது காலம் தேவைப்படுவதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடர்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைப்பாரா எனும் அளவுக்கு மோசமான நிலைக்கு சென்ற எஸ்.பி.பியின் உடல்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அவரது ரசிகர்களை கடந்து ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் சற்று மகிழ்ச்சி அளித்துள்ளது. 
அவருக்காக  அனைவருமே, பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில், மருத்துவர்களின் கடின முயற்சிக்குப் பிறகு அவர் குணமாகியிருப்பது, மகிழ்ச்சி மட்டுமன்றி நெகிழ்ச்சியான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

கொரோனாவிலிருந்து குணமாகிவிட்ட நம் பாடும் நிலா, விரைவில் நுரையீரல் தொற்றிலிருந்தும் குணமடைய அனைவரும் பிராத்திப்போம்!