2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதைச் செயல்படுத்தவும் தொடங்கி முதல் கட்டமாக 1.5 கோடி ரூபாய் திரையுலகினருக்கு வழங்கியுள்ளார். இதர தொகை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார் சூர்யா. பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்றை செய்துள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் பாடல்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள்.