தமிழ் சினிமா தற்போது எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ திரைப்படம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி திரைக்கதை அமைத்து இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்க அவருடன் இணைந்து சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பிலிருந்தே இருக்கின்றது. காரணம் இயக்குனர் வெற்றிமாறனின் முந்தைய திரைப்படங்கள் எதுவும் தோல்வியை சந்திக்காமல் மக்கள் கொண்டாடும் அளவு அமைந்தது அதனாலே இந்த திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்கும் விடுதலை படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் அவரது இசையில் உருவான பாடல்கள் கடந்த மார்ச் 8 பிரமாண்ட இசை வெளியீட்டு விழா ஏற்பாடு செய்து பாடல்களை வெளியிட்டனர். இதனுடன் படத்தின் முன்னோட்டமும் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இளையராஜா இசையில் உருவான மூன்று பாடல்களும் மக்கள் மனதை அதிகளவு கவர்ந்து வருகிறது. முன்னதாக பாடலாசிரியர் சுகா எழுதிய ‘ஒன்னோடு நடந்தா’ பாடல் தனுஷ் குரலில் மிகபெரிய ஹிட் அடித்தது.

அந்த பாடலுடன் விடுதலை முதல் பாகத்தில் காட்டு மல்லி மற்றும் அருட்பெருஞ்சோதி ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு பாடல்களும் பல இசை தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள அருட்பெருஞ்சோதி பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்த ஆன்மீகவாதி வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகாளர் எழுதிய பாடலை மீள் உருவாக்கம் செய்துள்ளார் எழுத்தாளர் தங்கம். தெய்வீகமான வரிகளுக்கு குரல் கொடுத்து பாடலை மேலும் ரசிக்கும் அளவு கொடுத்திருக்கிறார் இளையராஜா. இந்த பாடல் தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

ஆன்மிகம் தொடர்பாக இளையராஜா பல படங்களில் பல சிறப்பு மிக்க பாடலுக்கு இசையமைத்தும் எழுதியும் இதுவரை கொடுத்துள்ளார். அப்படி அதன்படி வெளியான பல பாடல்கள் மக்கள்மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த ஹிட் பாடல்களின் வரிசையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது அருட்பெருஞ்சோதி பாடலும் இணைந்துள்ளது.

வரும் மார்ச் மாதம் 31 ம் தேதி விடுதலை படத்தின் முதல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.