கடந்த ஜனவரி 11 அன்று அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படமும், விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகிய ‘வாரிசு’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. தமிழ் ரசிகர்களின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்திற்காகவே புகழ்பெற்ற திரையரங்கம் என்றால் அது சென்னை ரோகினி திரையரங்கம் தான். உச்ச நட்சத்திரங்களின் படங்களின் கொண்டாட்டம் என்றாலே ரோகினி திரையரங்கம் தான் முன்னிலை. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இணைந்து கொண்டாடுவது வழக்கம்.

விஜய், அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் ரோஹினி திரையரங்கள் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே ஆரவாரத்துடன் இருந்தது. திருவிழாவை மிஞ்சும் அளவு கொண்டாட்டங்களுடன் சில ரசிகர்களின் அட்டகாசமும் நிறைந்து காணப்பட்டது. மேலும் பேனர்களை கிழித்து, போலீஸுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டு திரையரங்க பொருட்களை சேதப்படுத்தினர். இந்த பெரும் கொண்டாட்டத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பரத் எனும் அஜித் ரசிகர் கொண்டாட்டத்தின் மிகுதியில் கனராக லாரி மீது ஏறி குதிக்கும் பொழுது தவறுதலாக விழுந்து பலியானார். 19 வயதுடைய ரசிகரின் மரணம் பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது, இதனையடுத்து பல இடங்களில் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்தது, மேலும் ரசிகர் உயிரிழந்ததை மேற்கொண்டு விசாரிக்க கோரிக்கை தொடர்ந்து வலுத்தது. திரையரங்கின் சார்பில் cctv வீடியோ கேட்டு நின்றனர் ஒரு தரப்பினர்.

இதையடுத்து ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டார் அதில் இது குறித்து பேசிய அவர், "அந்த சம்பவம் திரையரங்கிற்கு வெளியேவும் நடக்கல.. உள்ளேவும் நடக்கல.. திரையரங்கிற்கு கொஞ்சம் தள்ளி தான் நடந்தது. அதனால அந்த சம்பவம் குறித்து CCTV தகவல் எதும் கிடைக்கல.. ஒருவேளை உள்ளே நடந்திருந்தால் எங்கள் திரையரங்கின் உள்ளே வைத்திருக்கும் CCTV ல் பதிவாகியிருக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளர் ரேவந்த் நமது கலாட்டா தமிழ் பேட்டியில், துணிவு, வாரிசு திரைப்படங்களின் தற்போதைய நிலை, முதல் நாள் முதல் காட்சிக்கு ரோகினி திரையரங்கிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து பகிர்ந்த முழு வீடியோ இதோ..