எதிர்பார்த்ததை விடவும் அதிகமான சேதத்தை மிக்ஜாங் புயல் சென்னையில் ஏற்படுத்தியிருக்கிறது என சொல்லும் அளவிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வந்த புயலை காட்டிலும் இந்த முறை அதிக அளவு மழை பதிவாகி இருக்கிறது. சென்னையின் பல முக்கிய பகுதிகளிலும் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒருபுறம் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் அனைத்தும் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்து இருப்பதாக குறிப்பிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் & அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கும் வகையில் ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில்,

“எல்லோருக்கும் வணக்கம்!
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது பெய்து வரும் மழையினாலும் இந்த புயலினாலும் முதலில் நடக்கப் போகிற விஷயம் மின்சாரம் துண்டிக்கப்படும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தேங்க ஆரம்பித்து விடும். அதன் பிறகு இருக்கிற தண்ணீர் எல்லாம் வீட்டுக்குள் நுழைய ஆரம்பித்து விடும். நான் இப்போது அண்ணா நகரில் தங்கி இருக்கிறேன். என் வீட்டிற்குள்ளேயே ஒரு அடிக்கு தண்ணீர் வந்து விட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள். இன்னும் கீழ் இருக்கும் பகுதிகளில் என்ன நிலையில் இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள். 2015 ஆம் ஆண்டு நடந்தபோது எல்லோரும் இறங்கி வேலை செய்து முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். இப்போது எட்டு வருடங்களுக்கு பிறகு அதைவிட மோசமான ஒரு நிலைமை தான் வந்திருக்கிறது என்று நினைக்கும்போது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. மழைநீர் வடிகால் திட்டம் என்ன ஆனது. அப்படி ஒரு திட்டம் இருப்பதாக சென்னை கார்ப்பரேஷன் அறிவித்தார்கள் அது எங்கே என்று தெரியவில்லை. அது எங்கே ஆரம்பித்தார்கள் எங்கே முடித்தார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு விண்ணப்பம் தான் இது ஒரு வேண்டுகோள் தான் ஒரு வாக்காளர் என்ற அடிப்படையில் கேட்கிறேன் ஒரு நடிகராக கேட்கவில்லை. சென்னையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கொஞ்சம் வெளியில் வந்து இதை சரி செய்து கொடுத்தீர்கள் என்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும். பொதுமக்கள் சேவை செய்வது என்பதை விட்டு விடுங்கள் அதை அவர்கள் செய்து கொள்வார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளுக்கு வெளியில் வந்து உதவி செய்தீர்கள் என்றால் பொதுமக்களுக்கு ஒரு வித பாதுகாப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்... இல்லையென்றால் இருட்டில் அவரவர்கள் குழந்தையை வைத்திருப்பார்கள் வயதானவர்கள் இருப்பார்கள் ஏன் என் வீட்டிலேயே வயதானவர்கள் இருக்கிறார்கள் என்னுடைய அம்மா அப்பா இருக்கிறார்கள். பயந்து போய் இருக்கிறார்கள் அண்ணா நகரில் ஒரு அடிக்கு தண்ணீர் வீட்டுக்குள் வந்திருக்கிறது என்று... இது பொதுவான ஒரு பிரச்சனை இது வந்து ஒரு தனிப்பட்ட அரசியல் சார்ந்த ஒரு குற்றச்சாட்டு இல்லை. ஒரு சின்ன மழை என்றாலே தி-நகரில் தண்ணீர் தேங்கும் இப்போது சுற்றி எல்லா பக்கமும் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்த்தால் தர்ம சங்கடமாகவும் கேவலமாகவும் இருக்கிறது. தயவு செய்து இதற்கு என்ன உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரும் அரசாங்க ஊழியர்களும் தயவு செய்து இறங்கி வேலை செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் நாங்கள் வரி கட்டுகிறோம் எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள் எல்லா தொகுதிகளிலும் இந்த விஷயத்திற்கு எதிர்பார்ப்பார்கள் மந்திரிகள் உதவுவார்கள் என்று எனவே கண்டிப்பாக இந்த நேரத்தில் முகம் தெரிந்தால் நன்றாக இருக்கும். நன்றி!!!”

என தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோ இதோ...