கடந்த 15 நாட்களாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் தொந்தரவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் அவர்கள் இன்னும் பூரண குணமடையாததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் தமிழ்த் திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். மேலும் எண்ணற்ற ரசிகர்களும் தொண்டர்களும் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார். இதுகுறித்து தனது X பக்கத்தில்,
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நடிகர் சூர்யாவின் திரை பயணத்தில் ஆரம்ப கட்டத்தில் வந்த படங்களில் மிக முக்கியமான ஒரு படம் பெரியண்ணா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க மிக முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்திருப்பார். தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்திருக்கிறார். சூர்யா அவர்கள் தெரிவித்தபடியே வேண்டுதல்கள் பலிக்கட்டும் விரைவில் பூரண குணமடைந்து கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வீடு திரும்பட்டும் என நடிகர் சூர்யாவின் அந்த பதிவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் சூர்யாவின் அந்த பதிவு இதோ..
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
கடந்த நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை முதலில் சீராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக சீராக இல்லை என கடந்த நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடியோ மூலமாக கேப்டன் அவர்கள் நலமோடு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேபோல அவரது மகன் சண்முக பாண்டியன் அவர்கள் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது நலமோடு இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டது அனைவருக்கும் ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்தது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் மனமார்ந்த வேண்டிக் கொள்கிறது.