ஒட்டுமொத்த சென்னையையும் உலுக்கி இருக்கிறது மிக்ஜாங் புயல். கடந்த 48 மணி நேரங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்யும் மழையால் மொத்த சென்னையும் வெள்ளத்தால் ஸ்தம்பித்து இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேவையான பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் மேற்கொண்ட போதும் கட்டுக்கடங்காத கனமழையின் காரணமாக பல்வேறு முக்கிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அதிரடி உத்தரவுகளின் பெயரில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதால் பேரிடர் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சீற்றத்தை இந்த மிக்ஜாங் புயல் மீண்டும் நினைவூட்டி இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரிடர் போலவே இந்த முறையும் ஒட்டு மொத்த சென்னையும் சந்தித்து விடுமோ என்ற பயம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தமிழ் சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மிக்ஜாங் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழை குறித்து சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த அறிக்கையில்,
மிக்ஜாங் சூறாவளி மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் இதயம் செல்கிறது, ஒவ்வொரு முறையும் நமது சென்னை ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபடுவதைக் காண்பது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவரையொருவர், ஒவ்வொரு முறையும் நாம் எப்படி வலுவாக மீண்டு வந்திருக்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, நம் அனைவரையும் பாதுகாப்பாகவும், வலிமையாகவும், அனைத்து துன்பங்களுக்கும் எதிராக ஒற்றுமையாகவும் வைத்திருக்கட்டும். இந்த கடினமான சூழ்நிலையில் பாதுகாப்பை உறுதி செய்ய நமது முதல்வர் மற்றும் அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பாதுகாப்பாக இருங்கள், சாத்தியமான வழிகளில் தேவைப்படும் மற்றவர்களை அணுக முயற்சிக்கவும்.
உங்கள் வயதான அண்டை வீட்டார், சிறு குழந்தைகளுடன் இருக்கும் அண்டை வீட்டார் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
ஒன்றாக நாம் பலமாக இருக்கிறோம்.
யுவன் சங்கர் ராஜா
என தெரிவித்திருக்கிறார். அந்த அறிக்கை இதோ…
— Raja yuvan (@thisisysr) December 4, 2023
2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட அதிக அளவு மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பலரும் மீட்கப்பட்டு ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பாதுகாப்பு காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிற.து இரவு பத்து மணி வரை தொடர்ந்து பெய்யும் மழை பின்னர் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் வீடுகளை விட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவசர உதவிக்காக தொலைபேசி எண்களும் பகிரப்பட்டு இருக்கிறது. அதன்படி தேவையான உதவிகள் அந்தந்த இடங்களுக்கு முடிந்தவரை விரைவில் கொடுக்கப்பட்டு வருகிறது.