கன்னட திரையுலகில் கவனிக்கத்தக்க படமாக கடந்த ஆண்டு வெளிவந்த படம் காந்தாரா, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போராடும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் குலதெய்வ வழிபாடு மையப்படுத்தி உருவான இப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். படத்தின் அமோக வரவேற்பை அடுத்து காந்தாரா படத்தை அனைத்து மொழியிலும் டப் செய்து வெளியிட்டது படக்குழு. எந்தளவு கன்னட திரையுலகில் வரவேற்பை பெற்றதோ அதே அளவில் காந்தாரா பல மொழிகளில் வெற்றி நடைபோட்டது. சமீப காலமாக திரைப்பிரபலங்களாலும் சினிமா ரசிகர்களாலும் பாராட்டை பெற்ற காந்தாரா வசூலில் மட்டுமல்லாமல் விருதுகளையும் குவித்து வருகிறது சமீபத்தில் இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் உயர்ந்த விருதாக கருதக்கூடிய ஆஸ்கார் விருதுக்கு காந்தாரா படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்கார் 2023 பரிந்துரைப்பட்டியலில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது காந்தாரா திரைப்படம்.

கிட்டதட்ட பரிந்துரை பதிவுகளை முடிக்கும் ஆஸ்கார் பந்தையத்தில் தாமதாக சேர்ந்தாலும் ஒரு நல்ல இடத்தில் தேர்வு பெற்றுள்ளது காந்தாரா திரைப்படம். ஏற்கனவே இயக்குனர் ராஜ மௌலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஹோம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் "கந்தாரா திரைப்படம் 2 ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் ஆதரவுடன் இந்த பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். ஆஸ்கார் மேடையில் ரிஷப் செட்டி மற்றும் காந்தாரா பிரகாசிக்க இருக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து காந்தாரா படத்தின் ரசிகர்கள் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் காந்தாரா ஆஸ்காருக்கு சென்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்கார் பரிந்துரைக்கான இறுதி பட்டியல் வரும் ஜனவரி 24 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காந்தாரா மற்றும் ஆர் ஆர் ஆர் படம் நிலை என்ன என்பது உறுதி செய்யப்படும். ‘கேஜிஎஃப்’ , ‘777 சார்லி’ க்கு பிறகு காந்தாரா மற்றுமொரு வைரகல்லாக கன்னட திரையுலகில் ஜொலிக்கவிருக்கிறது. மேலும் இதுபோன்ற படங்களினால் பல நாடுகளின் பொழுதுபோக்கு ரசனை இந்திய சினிமா மீது திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.