தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பேசுகையில், “குமரிக் கடல் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது.

அதன் காரணமாக அதி கனமழை 3 இடங்களிலும், கன முதல் மிக கனமழை 4 இடங்களிலும், 70 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை - காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, தென்காசி ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்; கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் கனமழையும்; பிற மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த சில தினங்களாக பெய்துவந்த தொடர்மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இனி வரும் நாள்களில் கணிக்கப்பட்டுள்ள மழையின் அளவு, அதனால் ஏற்படவுள்ள சேதங்கள் போன்றவற்றை கணக்கில்கொண்டு, அடுத்து வரும் 2 தினங்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில், அக்டோபர் 1 முதல் இன்று வரை 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இயல்பின் அளவு, 34 செ.மீ.தான். அதை பார்க்கையில், வடகிழக்கு பருவமழை 70% அதிகம் பெய்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழைப் பொழிவு 96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 67% அதிகம் பதிவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழக புதுவை மாநிலங்களில் ஒருநாளின் சராசரி மழை அளவும் கடந்த 24 மணி நேரத்தில்தான் அதிகமாகி உள்ளது” இவ்வாறு பாலச்சந்திரன் கூறியுள்ளார்.