நெல்லையில் சாஃப்டர் பள்ளி பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான விவகாரத்தில் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி உள்பட 4 பேர் பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோது காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது.

அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர். திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர பள்ளி கல்வித்துறை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நியமித்த குழுக்கள் தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சாஃப்டர் பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்ததாரர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சாஃப்டர் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் ஞானசெல்வி, 3 உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் ஆகிய நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முதற்கட்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோட்டாச்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஆட்சியரிடம் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.