தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது.

மேலும் நாளை கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9-ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர், ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9-ல் அரியலூர் ,பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை ,தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.