“அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன? மூன்று தலைமை இருந்தால் என்ன? உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே” என்று, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அடித்த கமெண்ட், தமிழக அரசியலில் வைரலாகி வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள், கடந்த 2 நாட்களாக இணையத்தில் பரவி தமிழக அரசியலில் பெரும் வைரலாகி வந்தது.

இப்படியான சூழலில் தான் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “சென்னையில் ஜெயலலிதா நினைவு இடத்தில் அநாகரீகமான வகையில் அமமுகவினர் நடந்து கொண்டனர் என்றும், நினைவுநாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும், அதற்காக கட்சியில் சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளது” என்றும், தெரிவித்தார். 

“அதிமுகவை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவது நடக்காத காரியம் என்றும், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றும், அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானார்கள்.

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கொண்டனர். பின்னர் அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து அவர்கள் இருவரையும் வரவேற்றனர். 

முக்கியமாக, மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக சசிகலா தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், “அதிமுகவில் பொதுச் செயலாளர் என்கிற பதவியை நிரந்தரமாக நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை கொண்டு வந்திருக்கிறார்கள்” எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ.பன்னீர்செல்வமும். 

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,  “’அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன?, மூன்று தலைமை இருந்தால் என்ன?, உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே” என்று, விமர்சித்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “சபாஷ் சகோதரி, உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி” என்றும் அந்த கருத்தை வரேவேற்று உள்ளார். 

இதனிடையே, “அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன.. உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே” என்று, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளது தமிழக அரசியலில் வைரலாகி வருகிறது.