அரசியலுக்கு வருவீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பளீச் என பதில் அளித்துள்ளார்.

தி.மு.க. இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. இவர் திரைப்படத்துறையில் உள்ள ஆர்வம் காரணமாக வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். குதிரைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல்நிலைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடந்தது.

இந்த மருத்துவ முகாமில் ஏராளமான குதிரைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன் 80-க்கும் மேற்ப்பட்ட குதிரைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் தடுப்பூசிகளும், குதிரையின் உரிமையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டது. 

kiruthiga udhayanidhi

மேலும்  குதிரைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கிருத்திகா உதயநிதி குதிரையின் உரிமையாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது போன்ற முகாம் ஏற்கனவே ஒரு முறை நடத்தப்பட்டுள்ளது. 

2-வது முறையாக இன்று அந்த முகாம் நடத்தப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மூலம் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வரும் காலங்களில் விலங்கு நல ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடர்ந்து இதுபோன்ற மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சென்னை மெரினா கடற்கரையில் குதிரைகளை கொண்டு வாழ்வு நடத்தி வரும் குதிரை உரிமையாளர்களின் தேவைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து வருகிறோம்.

வரும் நாட்களில் அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பில் எடுக்கப்படும்" இவ்வாறு கிருத்திகா உதயநிதி தெரிவித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி அரசியலுக்கு வரும் எந்த திட்டமும் தனக்கு இல்லை என்று கூறினார். 

மேலும் குடும்பத்தில் ஒருவர் அரசியலில் இருந்தால் போதும் அரசியலில்  ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை எனத் திட்டவட்டமாக கிருத்திகா உதயநிதி பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தி.மு.க. இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தீவிர அரசியலில் நுழைந்தார். அப்போது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். 

கடந்த 2019 மக்களவை தேர்தலில் தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புதுவை உட்பட 39 இடங்களில் வென்றன. அதைத் தொடர்ந்து 2019 ஜூலை மாதம் அவர் தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் மாநிலம் முழுக்க உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

kiruthiga dmk

அவரது பிரச்சாரத்திற்கு மாநிலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற போது, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.