தடுப்பூசி செலுத்தாமல் போலி சான்றிதழ் வழங்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு அலைகளை உருவாக்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.  கொரோனா வைரஸ் ஏற்கனவே ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்த நிலையில், தற்போது 32-க்கும் மேற்பட்ட பிறழ்களை கொண்ட ஒமிக்ரான் தற்போது அதிவேகத்தில் பரவி வருகிறது. 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பின்பு போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பரவியிய நிலையில் கடந்த 2 வாரங்களில் உலகின் பல நாடுகளுக்கும் சுமார் 46 நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த ஒமிக்ரானால் பிப்ரவரியில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்துவந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இயல்புக்கு அதிகமாக சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. 

CORONA VACCINE TAMIL NADU

இதனால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. மேலும் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தும் வகையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக மதுரை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தரும் பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

சிலர் தங்கள் ஆதார் எண்களை நண்பர்கள் அல்லது தெரிந்த களப்பணியாளர்களிடம் கொடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட இணை இயக்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

CORONA VACCINE TAMIL NADU

இதன்படி களப்பணியாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள், புரோக்கர்கள் அல்லது ஏஜெண்ட்களை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி செலுத்தியப் பிறகே அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தாமலே சான்றிதழ் வழங்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சிலர் எந்த ஏஜெண்டையும் அணுகாத பலருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தாமலேயே தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

மதுரையில் கூட 19 வயது கல்லூரி மாணவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியதாக அவரது மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே சான்றிதழ் கிடைத்த நபர்கள் எப்படி தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது என்பது குறித்த விளக்கத்தை பொது சுகாதாரத்துறை அளிக்கவில்லை.