எந்தவிதமான அடித்தளமும் இல்லாமல் சுவர் கட்டப்பட்டதுதான் சாஃப்டர் பள்ளி விபத்துக்கு காரணம் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி நெல்லை டவுன் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் சாஃப்டர் பள்ளியில், வகுப்பு இடைவேளையின்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதன்படி மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஓய்வுபெற்ற நீதிபதி துரை ஜெயச்சந்திரன் நேற்று சாஃப்டர் பள்ளியில் நேரில் ஆய்வுசெய்து விசாராணையை தொடங்கினார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் துரை ஜெயசந்திரன் கேட்டறிந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த துரை ஜெயச்சந்திரனிடம், விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் விரைவான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர். அவர்களிடம் தனது ஆறுதலை துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி துரை ஜெயச்சந்திரன், “நெல்லையில் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் விரைவில் உடல்நலம் பெறவேண்டும்.

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் இந்த விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி உள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே நடைபெற்றுள்ளது. நடந்த சம்பவத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்குத் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும். இந்த விபத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில மனித உரிமை ஆணைய கவனத்திற்கு இந்த சம்பவம் வந்த நிலையில் தமிழக அரசு இந்த விபத்து தொடர்பாக விரைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கும் காயம்பட்டவர்கள் குடும்பத்திற்கும் இழப்பீடு அறிவித்துள்ளது. எந்தவிதமான அடித்தளம் இல்லாமல் சுவர் கட்டப்பட்டதுதான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.