கொடைக்கானலை அடுத்து கோவையில் சாக்குமூட்டையில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சத்யராஜ் என்பவரின் இரண்டாவது மகள் பிரித்திகா (9), அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிறுமி சுமார் 11 மணியளவில் வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் சிறுமி பிரித்திகா திரும்ப வராததால் சக மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவளை தேடியுள்ளனர்.

அப்போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் தீயில் கருகிய நிலையில் ஒரு சிறுமி கிடந்ததைக் கண்டனர். ஆனால் சிறுமியின் முகம் தீயில் கருகிய நிலையில் இருந்ததால் அது பிரித்திகாவா என்று சக மாணவிகளுக்கு தெரியவில்லை.

இதையடுத்து அந்த மாணவிகள் அதே பள்ளியில் படித்துவரும் பிரித்திகாவின் அக்கா பிரியதர்ஷினியிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். அதைக்கேட்டு பதறிப்போன பிரியதர்ஷினி ஓடிச்சென்று பார்த்தபோது தீயில் கருகி கிடப்பது தனது தங்கை தான் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைந்தாள்.

உடனே பள்ளி நிர்வாகத்தினருக்கும், தனது தந்தை சத்யராஜூக்கும் பிரியதர்ஷினி தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு பதறி துடித்து பள்ளிக்கு ஓடிவந்த சத்யராஜ், தீயில் எரிந்து கிடந்த மகளை பார்த்து கதறி அழுதார்.

அப்போது சிறுமி பிரித்திகா உடலில் அசைவு தெரியவே மகளை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தந்தை சத்யராஜ் கொண்டு சென்றார். அங்கு அவளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோவையில் 15 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த முட்புதரில் கிடந்த ஒரு கட்டப்பட்ட சாக்குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது.

இதனால் சாக்கை அவிழ்த்து திறந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதைப் பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சரவணம்பட்டி காவல்துறைக்கு தூய்மை பணியாளர்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடவியல் துறையின் உதவியோடு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் அது 15 வயது சிறுமியின் உடல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 11 ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலுள்ள முட்புதரிலேயே சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், சிறுமியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானல், கோவை என அடுத்தடுத்து சிறுமிகளின் மர்மமான உயிரிழப்பு பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.