கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

“தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து வந்த அவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 7 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

omicron tamil nadu

இதேபோல் காங்கோ நாட்டிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தெப்டுகிறது.

காங்கோவில் இருந்து ஆரணி வந்த பெண் உட்பட மொத்தம் 9 பேருக்கு எஸ்-ஜூன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஏற்கனவே ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில் மீதமுள்ள 8 பேருக்கு எஸ்-ஜீன் குறைவாக உள்ளது. 

முதற்கட்ட சோதனை முடிவுகளையடுத்து மறு பரிசோதனைக்கு 8 பேரின் சோதனை முடிவுகளை பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளோம். ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள், 8 ஆயிரம் ஐ.சி.யூ. படுக்கைகள் தயாராக உள்ளது. 

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

omicron tamil nadu

இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒமிக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  இரண்டு தவணை தடுப்பூசி, சமூக இடைவெளி, அடிக்கடி கைக்கழுவுதல், முகக்கவசம் கட்டாயமாக அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை.

பதற்றத்திற்கான நேரம் இது இல்லை. ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும்” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் திரிபு இந்தியா உள்பட 77 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 80 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது.

நேற்று முன்தினம் வரை தமிழகத்தைச் சுற்றியுள்ள கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா மாநிலங்களில் பரவிய நிலையில், நேற்று முதல்முறையாக தமிழகத்திலும் ஒமிக்ரான் தொற்று நுழைந்தது குறிப்பிடத்தக்கது.