தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் அதிவேகமாக பரவக்கூடியது என்பதால் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தின. இருப்பினும் இந்தியா உள்பட 116 நாடுகளில் ஒமிக்ரான் பரவி விட்டது. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி உள்ளது. 600-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி வரும் 31 ஆம் தேதி முடிவெடுக்கப்படுகிறது.

இதற்கிடையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் இன்று காலை கூறுகையில், “தமிழகத்தில் 118 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து ஒமிக்ரான் பரவும் நிலை மாறி, வெளிநாடு செல்லாதவர்களுக்கும் ஓமிக்ரான் பரவி தமிழகத்தில் சமூக பரவலாகி மாறி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் குணமடைந்து விட்டனர். மீதமுள்ள 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 7 பேர் சென்னையையும், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்று உறுதியானவர்களில் 6 பேர் சென்னை கிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் ஆபத்து நிறைந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஒமிக்ரான் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ள 11 பேரிடம் யார் யார் தொடர்பில் இருந்தார்கள், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அவர்கள் சென்ற இடங்களில் யார் யாரைச் சந்தித்தார்கள் எனக் கேட்டறிந்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.

மேலும் ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் திரையரங்குகள், துக்க நிகழ்வுகள், மால்கள், திருமண நிகழ்வுகள் என அவர்கள் எங்கெங்கே சென்றார்கள் எனக் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதன் அடிப்படையில் ஒமிக்ரான் இன்னும் எவ்வளவு பேருக்குப் பரவியுள்ளது என்பதைக் கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.