தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த மாதம் முழுவதும் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டித்தீர்த்ததையும் காண முடிந்தது.  

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. வடகிழக்கு பருவ கனமழையால் சென்னை, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

Chennai IMD Weather reportஅதிலும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 3 முறை சென்னை மக்களை நிம்மதிகொள்ள முடியாமல் கனமழை தவிக்க வைத்தது. இந்த கனமழை முடிந்து தற்போது பனிக்காலம் துவங்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் தற்போது சில இடங்களில் மழை பெய்துவருகிறது. இன்று காலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"28.12.2021, 29.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.  

weather report chennai imd30.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

டிசம்பர் 31, ஜனவரி 1: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.12.2021, 29.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஏனைய  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான   மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 28 வரை 704.03 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. 

இயல்பான மழை அளவு 446.7 மிமீ அளவுதான். நடப்பாண்டு இயல்பை விட 58% அளவிற்கு மழை பதிவாகியுள்ளது" என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.