திருவொற்றியூரில் நேற்று குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்தநிலையில், அந்த  வீடுகளுக்கு அருகில் உள்ள 24 வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் 1998-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. 

இதில் 24 வீடுகள் கொண்ட ஏ, பி, சி, டி, இ, எப் என மொத்தம் 14 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டிடங்களில் 336 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் தற்போது பெற்றோர், சிறுவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவும், நெரிசலுடனும் காணப்படும். 

collapsed houses chennaiஇதற்கிடையில் இந்த கட்டிடங்களில் கடந்த 2 ஆண்டுகளாகவே லேசான விரிசல்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் சென்னையில் பெய்த பெருமழையால் இந்த கட்டிடங்களில் அந்த விரிசல்கள் பெரிதாகியுள்ளது. 

இதனை சரிசெய்து கட்டிடங்களை புனரமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என குடிசை மாற்று வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ‘டி’ பிளாக் கட்டிடத்தில் ஒரு சில இடங்களில் திடீரென விரிசல்கள் பெரிதானது. இதையடுத்து கட்டிடத்தில் இருந்த மக்கள் அனைவரும் சுதாரித்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர். காலை 10.30 மணிக்கு யாரும் எதிர்பாராதவகையில்‘டி’ பிளாக் கட்டிடம் அப்படியே சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. 

‘டி’ பிளாக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ‘இ’ பிளாக் கட்டிடத்தின் ஒரு பகுதி சற்று சேதம் அடைந்தது. முன்கூட்டியே மக்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். 

இதையடுத்து உடனடியாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு விரைந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  அதேசமயம் 1993 -ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு இடிந்து விழுந்து மக்கள் பாதிப்படைந்த நிலையில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

collapsed houses chennaiஅத்துடன் விபத்து ஏற்படாத வகையில் இது போன்ற பழைய குடியிருப்புகளின் விபரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று 2-வது நாளாக இடிந்த வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மற்றொரு பக்கம் அந்த இடிந்து விழுந்த வீடுகளுக்கு அருகில் உள்ள மற்ற 24 வீடுகளை காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 48 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தங்கள் உடைமைகளை, அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மண்டபத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். 

இன்றைய தினம் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் குழு நேரில் வந்து ஆய்வு செய்கின்றனர். ஆய்வில் கட்டிடங்கள் உறுதி தன்மையுடன் இருந்தால் மட்டுமே அங்கு குடியிருப்பு வாசிகளை மீண்டும் தங்க வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.