தமிழகத்தில் ஒமிக்ரான் சமூகப் பரவலாக மாறிவருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதுவரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 653 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. 

அதன்படி ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்தியக்குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Community Spread omicronஅந்த வகையில் தமிழகத்துக்கு மருத்துவர் வினிதா தலைமையிலான மருத்துவர்கள் புர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தனர். 

இந்த குழுவினர் தொடர்ந்து தமிழகத்தில் தங்கி 3 முதல் 5 நாட்கள் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய நிபுணர் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்தினர். 

அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய நிபுணர் குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் மாவட்ட வாரியாக சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் காணொலிக்காட்சி மூலம் மத்திய நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடம், கட்டளை மையம், தடுப்பூசி சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை மத்திய நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் கூடுவாஞ்சேரி சென்ற மத்திய நிபுணர் குழுவினர், தடுப்பூசி மையம், கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வுசெய்தனர். 

மேலும் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக்கான ஏற்பாடுகள், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள் ஆகியவற்றையும் மத்திய நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர். மத்திய குழுவினர் இன்னும் இரண்டு நாட்கள் தமிழகத்தில் ஆய்வுசெய்வார்கள் என்று மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

community spread tamilnaduஇந்நிலையில் தமிழகத்தில் சமூகப் பரவலாக ஒமிக்ரான் மாறி வருவதாக மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகியவற்றில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டிருப்பதாகவும், ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

ஒமிக்ரான் தொற்றை உறுதிசெய்ய தமிழகத்தில் உள்ள மரபியல் ஆய்வுக்கூடத்தை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய நிபுணர் குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து ஒமிக்ரான் ஏற்படுவது என்ற நிலைமாறி, சமூக பரவல் என்ற நிலையை எட்டியிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில், 18 பேர் குணமடைந்திருப்பதாகவும், 16 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.