ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் 60-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் துவங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு அறிக்கை வாயிலாக பதிலளித்த படக்குழு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார், அனுபவமிக்க தயாரிப்பாளரான போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். யுவன் தந்த அப்டேட் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்திகேயா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.