தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த தீபாவளி தினத்தன்று ரிலீஸான திரைப்படம் எனிமி. இதனையடுத்து அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

அடுத்ததாக ராணா புரோடக்சன் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் “லத்தி சார்ஜ்" படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்துள்ளார் நடிகர் விஷால்.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். புனித் ராஜ்குமாரின் மறைவு கன்னட ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் தங்களது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விஷால் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் அவரின் குடும்பத்தினரையும் அவரது சகோதரர் சிவராஜ்குமாரையும் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “புனித் ராஜ்குமார் நம்முடன் இல்லை என்ற உண்மையை இப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்து சிவ ராஜ்குமார் அவர்களை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இதோ…