தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து வித்தியாசமான திரைப்படஙகளில் நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் மோகன்தாஸ்.

ராட்சசன் படத்தை தொடர்ந்து மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள மோகன்தாஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.

முன்னணி தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார்.

பாரம்பரியமான கட்டா குஸ்திச் சண்டையை மையப்படுத்தி உருவாகவுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 6) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டா குஸ்தி படத்தில் கதாநாயகியாக ஜகமே தந்திரம் & பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழில் கட்டா குஸ்தி & தெலுங்கில் மட்டி குஸ்தி என தயாராகும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டா குஸ்தி திரைப்படத்தின் படபூஜை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ…