இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. அவன் இவன் படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். நடிகை மிருணாளினி ரவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்தப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் என்பவர் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. படத்தின் ஓப்பனிங் சாங் காட்சிகளையும் படமாக்கினர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சில சண்டைக் காட்சியில் மட்டும் 4 நாட்களில் 4 கேமராக்களை கொண்டு முற்றிலும் மாறுபட்ட வகையில் மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு நான்காம் கட்டமாக படக்குழு முழுவதும் மலேசியா செல்ல இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த வாரம் ஊட்டி படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் படக்குழுவினருடன் இணைந்தார். ஊட்டி ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பிரகாஷ் ராஜ் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். இயக்குனர் ஆனந்த் சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கடைசியாக அற்புத நடிகர் பிரகாஷ்ராஜ் சார் எங்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். எதிரிகளின் எஜமானர் என்றும் தெரிவித்திருந்தார். 

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபுறம் போய் கொண்டிருக்கிறது. நடிகர் ஆர்யா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் அறிவிப்பு வெளியாகி திரை ரசிகர்களுக்கு விருந்தளித்தது. பாக்ஸர் ரோலுக்காக தன்னை முழுமையாக செதுக்கியிருந்தார் ஆர்யா. ஆனந்த் ஷங்கர் படத்தில் எந்த லுக்கில் இருப்பார் என்ற ஆவலில் அதிகரித்துள்ளது.