மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவியை நைசாக பேசி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற கணவன், துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அடுத்து உள்ள கோரா பகுதியில் வசித்து வரும் ரமேஷ் தேசாய் என்பவர், அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

ரமேஷ் தேசாயின் மனைவி ரஷிகா, வீட்டில் இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது வாழ்க்கை இப்படியாக மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், அடிக்கடி மனைவி மீது சந்தேகப்பட ஆரம்பித்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக கணவன் ரமேஷ் தேசாய், அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையே சண்டை வரத் தொடங்கி உள்ளது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷ் தேசாய், கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவி ரஷிகாவிடம் பிரச்சனை செய்து வந்து உள்ளார்.

இந்த சண்டையில் மனைவி ரஷிகாவை, கணவன் ரமேஷ் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மனைவி ரஷிகாவின் நடத்தையில், கணவன் ரமேசுக்கு அதிகப்படியான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக, அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கணவன் - மனைவி இருவரும் நிம்மதி இழந்து காணப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி “வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரித்து வரலாம்” என்று, கணவன் ரமேசும், தன் மனைவி ரஷிகாவிடம் நைசாக பேசி, அந்த வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

அந்த வனப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்ட கணவன் ரமேஷ், தன் மனைவி ரஷிகாவிடம் மீண்டும் பிரச்சனை செய்து, அவரை தாக்க தொடங்கியதாக தெரிகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மனைவி ரஷிகாவை அவர் சுட்டு உள்ளார். 

இதில், ரஷிகாவின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்து உள்ளது. இதனால், அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியும், பரிதாபமும் பட்ட கணவன் ரமேஷ், மனைவி ரஷிகாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள கார்வார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அத்துடன், அங்குள்ள கத்ரா காவல் நிலையம் சென்ற ரமேஷ், புகார் ஒன்றையும் அளித்தார். அந்த புகாரில், “நானும், எனது மனைவி ரஷிகாவும் வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்றோம். அப்போது, வன விலங்கு வேட்டைக்காரர்கள் சுட்டதில் எனது மனைவியின் வயிற்றில் குண்டு பாய்ந்து விட்டது. அவரை துப்பாக்கியால் சுட்ட வேட்டைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், புகார் அளித்த ரமேசின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால், அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, “மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவி ரஷிகாவை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றதை” ரமேஷ் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.