ஆயுர்வேதம், சித்தமருத்துவம் படித்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அலோபதி மருத்துவர்கள் சிகிச்சைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு மருத்துவ தொழிலில் கலப்படம் செய்யப்பட்டால் வெளிநாடுகளில் இந்திய மருத்துவ படிப்புகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்று அலோபதி மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


இந்திய நாட்டில் பாரம்பரியமிக்க மருத்துவத்துறையில் ஆயுர்வேதமும், சித்தமருத்துவமும் ஒன்று தான். ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் திடீரென அலோபதி மருத்துவத்துறையில் நுழைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டால் பொதுமக்களுக்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தும். 


இதுதொடர்பாக தமிழக மருத்துவ சங்கத்தின் தலைவர் சி.என்.ராஜா, செயலர் ஏ.கே.ரவிக்குமார் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் , ‘’ நிதி ஆயோக்,எல்லா மருத்துவத் துறைகளையும் இணைத்து ஒரே மருத்துவ முறையை ”நவீன மருத்துவம், ஆயுஷ்” 2030-ம் ஆண்டில் கொண்டுவர உள்ளது. இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது.

காரணம் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்களிடத்தில் அறுவை சிகிச்சைக்கான எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இருக்காது. அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் ஆயுர்வேத மருத்துவ முறையில் இல்லை. ஆயுர்வேத அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தரமான, ஆபத்துகள் இல்லாத ஒரு சிகிச்சையை தர இயலாது” என்றார்.


மேலும் , மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக வருகின்ற 11ம் தேதி நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளையும் நிறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.