இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை திரைப்படம் தயாராகி வருகிறது. RS இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.

இதனையடுத்து கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் தயாரிப்பில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார். விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் குறித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக விடுதலை மற்றும் வாடிவாசல் திரைப்படங்களுக்கு பிறகு தளபதி விஜய் உடனான திரைப்படம் இருக்கும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விடுதலை & வாடிவாசல் திரைப்படங்களுக்கு பிறகு ஒரு பெரிய படம் இயக்க உள்ளதாக வெற்றிமாறன் தற்போது தெரிவித்திருக்கிறார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை தயாரித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்த அனல் மேலே பனித்துளி திரைப்படம் தற்போது நேரடியாக SonyLiv தளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் பிரத்தியேக பேட்டியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் தனது பெரிய படம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இயக்குனராக உங்களது அடுத்தடுத்த படங்கள் என்னென்ன..? என்ற கேள்விக்கு, “விடுதலை இருக்கிறது. விடுதலை இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. அடுத்து சூர்யா - தாணு அவர்களுடன் வாடிவாசல். இதைத்தொடர்ந்து நிலம் எல்லாம் ரத்தம் எனும் வெப் சீரிஸில் இரண்டு எபிசோடுகளை இயக்க உள்ளேன். மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் ஒரு படம். அதன் பிறகு ஒரு பெரிய படம் இயக்கும் திட்டமிருக்கிறது. எதுவும் இன்னும் உறுதியாகவில்லை ஆனால் இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் பெரிய படம் என குறிப்பிட்டு இதனை தெரிவித்திருப்பதால், இது தளபதி விஜய் உடனா அல்லது உலகநாயகன் கமல்ஹாசன் உடனா என்றும் தற்போது ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக நாம் காத்திருப்போம்.