தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
 
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாத்திமாபாபு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பதிவிட்டு தன்னுடைய நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் இதைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ,

கடந்த மே 1-ம் தேதி எனக்கு கொரோனா உறுதியானது,இருந்தும் ஐந்து நாட்களில் எனக்கு குணமடைந்து விட்டது. ஆனால் என் கணவர் பாபுவிற்கு 40 நாட்கள் எடுத்தது. கடந்த ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் கீல் முதுகில் ஏற்பட்ட அதிகப்படியான வலியால் மிகுந்த அவதிக்குள்ளாகி பின்னர் 3.30 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் என் சகோதரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் என்னை உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்கள். 

உடனடியாக மருத்துவமனைக்கு சென்றதும் அங்கே பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 7.8mm  அளவுள்ள கல் சிறுநீரகப் பாதையில் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினர்.எனவே உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுநீரக கல் அகற்றப்பட்டது. 

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதிகப்படியான தண்ணீரை தினமும் குடித்து வருகிறேன். அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தினமும் 3.5 லிட்டர் தண்ணீரை குடிப்பதை வழக்கமாக ஆரம்பித்திருக்கிறேன் நீங்களும் பின்தொடருங்கள். என தெரிவித்திருக்கிறார். தற்போது பாத்திமாபாபு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா பாபு வெளியிட்ட வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.