தெலுங்கு திரை உலக ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த பழம்பெரும் நடிகரும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அவர்கள் காலமானார். 1965 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேனே மனசுலு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கிருஷ்ணா அவர்கள் இதுவரை 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா அவர்கள் தனது மகனான மகேஷ் பாபு அவர்களுடனும் இணைந்து போராட்டம், பஜார் ரவுடி, Spy117, வம்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த கந்தசாமி திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் முத்திரை பதித்த கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். நேற்று நவம்பர் 14ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி தற்போது காலமானார். மறைந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு வயது 79. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி அவர்கள் காலமானார். முன்னதாக கடந்த ஜனவரியில் மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபுவும் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டே மாதங்களில் தாய் - தந்தை இருவரையும் இழந்து பெரும் துயரத்தில் வாடும் நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஒட்டுமொத்த இந்திய துறை உலகை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

The demise of Krishna garu is a great loss to the Telugu film industry … working with him in 3 films are memories i will always cherish. My heartfelt condolences to his family …may his soul rest in peace @urstrulyMahesh

— Rajinikanth (@rajinikanth) November 15, 2022